ஸ்டாலின் என்று தனக்குப் பெயர் வைத்தது எப்படி என்பது குறித்த சுவாரஸ்சிய தகவல்களை தமிழக முதல்வர் பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரைப்பட நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவர் பூச்சி முருகன். இவருடைய இல்லத் திருமணமானது இன்று நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். அந்த உரையில் அவர் கூறியதாவது “உங்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்கு பிறக்கின்ற குழந்தைக்கு நல்ல தமிழ் பெயரை சூட்டுங்கள். உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். உங்களுக்கு மட்டும் ஏன் தமிழ் பெயர் சூட்டவில்லை என்று கேட்பீர்கள்.
அதற்கான விளக்கத்தை நான் பல பத்திரிக்கைகளில் கூறியிருக்கிறேன். என்னுடைய அண்ணன், தம்பி, தங்கை என அனைவருக்கும் தமிழ் பெயர் தான் எனக்கு மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக பெயர் சூட்டினார்கள். அதற்கும் ஒரு காரணம் இருக்கின்றது. என் தந்தை கம்யூனிஸ்ட் கொள்கை மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். ரஷ்யாவில் இருந்த கம்யூனிச கொள்கையின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் இறந்த நேரத்தில் கடற்கரையில் இரங்கல் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
அதில் கலைஞர் அவர்களும் கலந்து கொண்டார். அந்த சமயத்தில் ஒரு துண்டு சீட்டு கலைஞர் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அதில் உங்களுக்கு மகன் பிறந்திருக்கிறான் என்ற செய்தியும் எழுதப்பட்டிருந்தது. ஆகையால் கலைஞர் அங்கேயே “எனக்கு மகன் பிறந்திருக்கிறான். அந்த குழந்தைக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டுகிறேன்” என்று தெரிவித்தார். இந்தப் பெயரை கலைஞர் எனக்கு சூட்டுவதற்கு முன்பாக அய்யாத்துரை என்ற பெயரை யோசித்து வைத்திருந்தார்” என்று அவர் தெரிவித்தார்.