Categories
மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியில் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2000 நிவாரணம்..!

புதுச்சேரியில் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் அந்தந்த மாநில அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நேற்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல மதுபானக் கடைகள், ஆன்லைன் உணவு நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் 31ம் தேதி வரைதொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்படுகின்றன.

இப்படி அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சமாளிக்க ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

மேலும் ரேஷன் அட்டை தாரர்களின் வங்கிக்கணக்கில் ரூ 2000 செலுத்தப்படும் என்றும், கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இந்த நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |