Categories
அரசியல் மாநில செய்திகள்

‘மண்புழு’ முதலமைச்சர்…. அதிகமாக வாய் நீளுது…. ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை …!!

ஆர்.எஸ். பாரதி கைது குறித்து சேலத்தில் தமிழக முதல்வர் விளக்கம் அளித்ததற்கு முக.ஸ்டாலின் விடுத்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தமிழக முதல்வரை கடுமையாக விமர்சித்திருந்தார்.  இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக முதல்வரும் பேசி இருந்த நிலையில் மீண்டும் முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது ஆளும் தரப்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எதிர்க்கட்சி தலைவர் இப்படி பேசலாமா ? என்று முகம் சுளிக்க வைக்கும் வகையில் முதல்வரை மண்புழு என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.facebook.com/arivalayam/posts/3194631577234305

அதில், கொரோனா தடுப்பில் தனது தோல்வியை திசைதிருப்ப எடப்பாடி திரு. பழனிசாமி எத்தனை கபட நாடகங்கள் நடத்தினாலும்; மக்கள் மன்றத்தில் அவரது ஊழல் அத்தியாயங்களை அம்பலப்படுத்த திமுக தயங்காது என்று குறிப்பிட்டு முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சற்று அதிகமாக வாய் நீளுது:

தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, சேலம் மாவட்டத்திற்கு மட்டுமே முதலமைச்சராக இருப்பவரைப் போலச் செயல்படும் எடப்பாடி திரு. பழனிசாமி அவர்கள், இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். சென்னையில் ஏதாவது ஆய்வு செய்வார், அதைவிட்டால் சேலத்தில் ஆய்வு செய்வார். உருப்படியான செயல்திட்டம் இன்றி, ஆய்வு செய்வதால் மட்டுமே கொரோனா அகன்று ஓடிவிடும் என்று மனப்பால் குடிக்கிறார். வழக்கம் போல் சேலத்துக்கு கொரோனா குறித்து ஆய்வு நடத்தச் சென்ற திரு. பழனிசாமி சற்று அதிகமாக வாய் நீளம் காட்டியிருக்கிறார்.

இவரெல்லாம் ஒரு முதல்வரா?

கடந்த முறை சேலம் சென்றவர், என்னைக் குறித்து, ‘அவர் என்ன டாக்டரா?’ என்று கேட்டார். இன்றைய தினம் சேலம் சென்றவர், திரு. ஆர்.எஸ்.பாரதியை, ‘அவர் என்ன விஞ்ஞானியா?’ என்று கேட்டுள்ளார். இப்படி எல்லாரையும் பார்த்துக் கேள்வி கேட்கும் பழனிசாமியை, ‘இவரெல்லாம் ஒரு முதல்வரா?’ என்று மக்கள் ஒரே குரலில் கேட்டுக் கொண்டிருப்பது, அவரது காதில் விழுந்ததாகத் தெரியவில்லை! தி.மு.க. அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்களை நள்ளிரவில் கைது செய்தது தமிழகக் காவல்துறை. 100 நாட்களுக்கு முன்னால் பேசிய ஒன்றை எடுத்துக் கொண்டு, நேற்றைய தினம் அவசரம் அவசரமாகக் கைது செய்கிறார்கள் என்றால், என்ன காரணம்?

அம்மா’ மீதே வழக்கு:

நேற்றுத்தான் இந்த அரசாங்கத்தின் 200 கோடி மதிப்பிலான ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, அதன்மீது நடவடிக்கை தேவை என்று தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் விளக்கமாகப் புகார் செய்துள்ளார் திரு. ஆர்.எஸ்.பாரதி. அ.தி.மு.க. அணிந்திருக்கும் முகமூடி கிழிகிறதே என்ற ஆத்திரத்தில், பழிவாங்கும் நோக்கில், உடனே அவரது வீட்டுக்குப் போலீசை அனுப்பி இருக்கிறார் எடப்பாடி திரு. பழனிசாமி; அதுதான் உண்மை. எடப்பாடி திரு. பழனிசாமி மட்டுமல்ல; அவரது ‘அம்மா’ மீதே ‘டான்சி’ நிலபேர ஊழல் வழக்குப் போட்டு, ஆட்டம் காண வைத்தவர் திரு ஆர்.எஸ்.பாரதி.

கேழ்வரகில் நெய் வடிகிறதாம்:

‘திரு. ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். அப்படியானால் அவரைக் கைது செய்தது ஆந்திர காவல்துறையா? கைது செய்திருப்பது தமிழகக் காவல்துறை என்றால், அரசுக்குச் சம்பந்தம் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? கைது நடவடிக்கைக்கும், இவருக்கும் சம்பந்தம் இல்லையாம்; முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு, பதிலைப் படிக்கிறார். கேழ்வரகில் நெய் வடிகிறதாம்; கேட்டுக் கொள்ளுங்கள்!

ஒப்புதல் வாக்குமூலம்:

ஏற்கனவே இதுகுறித்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருப்பது இவருக்குத் தெரியாதா? யாரும் இவருக்குச் சொல்லவில்லையா? கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்கத் தவறிய கொடுஞ்செயலை – தோல்வியை, ஜமுக்காளத்தால் போர்த்தி மறைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களையும், பதற்றத்தில் இருக்கும் மக்களைத் திசை திருப்பவும், தன்மீது மக்கள் மன்றம் சுமத்திவரும் குற்றச்சாட்டில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், இந்தக் கைது நாடகங்களை நடத்துகிறார் எடப்பாடி திரு. பழனிசாமி. “தமிழ்நாடே ஸ்தம்பித்திருக்கிறது” என்ற வாய்மையை, வாய் தவறி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். உண்மைதானே! அச்சத்திலும், பீதியிலும் தமிழகம்’ ஸ்தம்பித்து’த் தான் இருக்கிறது.

மண்புழு முதலமைச்சர்:

பழங்குடிச் சிறுவனைச் செருப்பு தூக்கச் சொன்ன அமைச்சரைக் கண்டிக்க முடியாத, பெண் நிருபர்களைக் கொச்சைப்படுத்திய சிரிப்பு நடிகரைக் கைது செய்ய முடியாத, உயர்நீதிமன்றத்தையும், காவல் துறையையும் நா கூசும் வார்த்தைகளால் அர்ச்சித்து அவதூறு செய்தவரைப் பிடிக்க முடியாத, ‘மண்புழு’ முதலமைச்சர், பட்டியலின மக்களைக் காக்கத் தோள் தட்டிப் புறப்பட்டுள்ளதாக, பகல் வேடம் போடுவது வேடிக்கையானது; வினோதமானது!

திமுக தயாராக இருக்கும்:

எடப்பாடி திரு. பழனிசாமி, தமது வீட்டுக்கு எதிரே குடியிருந்த காவலர் பழனிசாமி குடும்பத்தை, சாதிவெறி கொண்டு என்ன பாடு படுத்தினார் என்ற கதைகளை முதல்வர் மறந்திருக்கலாம்; நாடு மறக்கவில்லை! திசை திருப்பும் தீய நோக்கத்துடன், கபட நாடகங்கள் எத்தனை நடத்தினாலும்; மக்கள் மன்றத்தில் எடப்பாடி திரு. பழனிசாமியின் அடுக்கடுக்கான ஊழல் அத்தியாயங்களை அம்பலப்படுத்துவதற்கு, திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் தயங்காது; தயாராகவே இருக்கும்!

Categories

Tech |