Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், ஆர். பி. உதயகுமார் பங்கேற்றுள்ளனர். மேலும் சுகாதாரத்துறை பீலா ராகேஷ், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரசுக்கு 160க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் இருந்த நிலையில், மேலும் ஒருவருக்கு கொரோனா உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்வீட்டர் மூலம் தெரிவித்திருந்தார். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த 21 வயது மாணவருக்கு 3வதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Categories

Tech |