கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. அதன் படி அத்தியாவசிய தேவையில்லாமல் பொது மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும், தேவையில்லாமல் சிலர் வீட்டை விட்டு வெளியே வருதால் அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். அதை தொடர்ந்து நேற்று முதல்வர் பழனிசாமி தமிழக மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், விழித்திரு.. விலகியிரு.. வீட்டிலிரு… என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.