100 நாள் வேலைத்திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களை தவிர்த்து அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு பணி தரலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது, 100 நாள் வேலைத்திட்டத்தை முகக்கவசம், தனி நபர் இடைவெளியுடன் செயல்படுத்த வேண்டும். 50 பேர் இருந்தால் ஒரே நேரத்தில் வரலாம், நூறு பேர் இருந்தால் இரண்டாக பிரித்துக் கொள்ளுங்கள்.
மேலும் அதற்கு மேல் அதிகமான பணியாளர்கள் ஊராட்சியில் இருந்தால் அதை 2 அல்லது 3 ஆக பிரித்து அவர்களுக்கு தேவையான பணிகளை வழங்க வேண்டும். அனைவரும் ஒரே நேரத்தில் வந்தால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். அதை அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். அங்கிருக்கின்ற ஊராட்சி செயலாளர்களும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதேபோல் 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிகின்றவர்கள் 55 வயதுக்கு மேல் இருந்தால் அவர்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் இருந்தாலும், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி தரலாம்” என்று கூறினார்.