கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் வெண்டிலேட்டர் அரசிடம் 2501, தனியாரிடம் 870 என தமிழகத்தில் 3,371 கருவிகள் கைவசம் உள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்னதாகவே ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது; 12 முறை என்னுடைய தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குதான் தமிழக அரசு அதிக முன்னுரிமை தந்து வருகிறது.கொரோனா வைரஸை தடுப்பதே முக்கியம் என அரசு கருதுகிறது.. அனைத்து மாவட்டங்களுக்கும் பிசிஆர் கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முகக்கவசங்கள், மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவிற்கு கையிருப்பு உள்ளது. அரசிடம் 2501, தனியாரிடம் 870 என தமிழகத்தில் 3,371 வெண்டிலேட்டர்கள் கைவசம் உள்ளது. N95 முகக்கவசம் 3 லட்சம், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPEs) 2 லட்சம், 1.95 லட்சம் PCR கிட்கள் கைவசம் உள்ளது.
மேலும் தொடர்ந்த அவர், கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த பெரும் சவாலாக உள்ளது.. தமிழகத்தில் ஒருநாளைக்கு 27 பரிசோதனை மையங்கள் மூலமாக 5,590 பேருக்கு பரிசோதனை செய்யும் வசதி உள்ளது என்று கூறிய அவர், தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,242 ல் இருந்து 1,267 ஆக அதிகரித்துள்ளது.
இதில் இன்று ஒரே நாளில் 62 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 118ல் இருந்து 180 ஆக அதிகரித்துள்ளது என்ற மகிழ்ச்சி செய்தியை கூறினார். அதேபோல கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது” என்றும் அவர் கூறினார்.