கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நேற்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழுக்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.
அதில் நெருக்கடியான நிலையில் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர்களின் சிறப்பான பணியால் அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கின்றன என்று கூறிய அவர், அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவை முழுமையாக தடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.
காய்கறிக் கடைகளில் தனிமனித இடைவெளி முறையாக பின்பற்றப்படவில்லை, ரேசன் கடைகள், காய்கறிக் கடைகளில் தனி மனித இடைவெளியை உறுதி செய்ய தன்னார்வலர்களை பயன்படுத்தலாம் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, நகர்ப்புறங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளத. சென்னை பெரிய நகரம், மக்கள் அதிகம் உள்ளதால் பாதிப்பு அதிகம் என தெரிவித்துள்ளார்.