மறைமுகமாக நடந்துவரும் படப்பிடிப்பை முதலமைச்சர் கவனிக்க வேண்டும் என்று பிரபல நடிகை கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
ஏனென்றால் கொரோனா காலகட்டத்திலும் பலர் சாதாரண நாட்களை போல வெளியில் சுற்றி திரிகின்றனர் என்றும் கார், மோட்டார், சைக்கிள்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் சாதாரண நாட்களை போலவே ரோட்டில் செல்கிறது என்றும் பலர் கண்டித்து வருகின்றனர். இதேபோல் சினிமா படப்பிடிப்புகளும் மறைமுகமாக நடந்து வருகிறது என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் வெளியான கவண், பாம்பு சட்டை, நய்யாண்டி, வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை சாந்தினி இதனை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, கொரோனா பரவலை தடுக்க வேண்டியது மிகவும் அவசியம். மேலும் மனித உயிர் மிகவும் முக்கியம்.
ஆனால், ஊரடங்கிலும் சென்னையில் பல இடங்களில் படப்பிடிப்புகள் மறைமுகமாக நடந்து வருகிறது. இதனை முதலமைச்சர் கவனிக்க வேண்டும். மேலும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.