தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் திருச்சி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செல்கிறார். இன்று முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் நடைபெறும் மூன்று முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் அதன்படி இன்று காலை 9:45 மணி அளவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகள், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் வழங்குதல், மணிமேகலை விருதுகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி போன்றவற்றை வழங்குகிறார்.
அதன் பிறகு மதியம் 12 மணியளவில் மணப்பாறை சிப்காட் வளாகத்தையும், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் இரண்டாம் அலகினையும் தொடங்கி வைக்கிறார். மேலும் மதியம் 2.45 மணியளவில் சன்னாசிப்பட்டியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 1 கோடி பயனாளர்களுக்கு புதிய மருந்து பெட்டகம் வழங்குகிறார். இதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்ட மருத்துவ கருவிகளின் சேவைகளையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.