தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எல்லோரும் சரியான முறையில் பணி செய்கிறார்களா என்பதை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதோடு முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியையும் முடுக்கி விட்டுள்ளாராம்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இல்லாவிட்டால் அமைச்சர்கள் தலைமைச் செயலகத்திற்கும் வருவதில்லை என்றும், ஒருவேளை வெளியூர் சென்றால் அந்தப் பக்கமே தலை வைத்து படுப்பதில்லை என்றும் முதல்வர் காதுகளுக்கு ஒரு செய்தி சென்றுள்ளதாம். அதோடு அமைச்சர்கள் சரிவர வராததன் காரணமாக நிறைய கோப்புகள் தேக்கமடைந்து பணிகள் பாதியிலேயே நிற்பதாகவும் முதல்வருக்கு புகார் சென்றுள்ளது.
இதன் காரணமாக முதல்வர் அமைச்சர்கள் எல்லோரும் சரியான முறையில் தலைமைச் செயலகம் வந்து பணிகளை செய்கிறார்களா என்பதை ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம். அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் அலுவலகத்தில் இருந்து அமைச்சர்கள் அறைக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அதிகாரிகள் பேசியுள்ளார்களாம். அப்போது ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே பணியில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால் தலைமைச் செயலகத்திற்கு வாரத்திற்கு 4 நாட்களாவது அமைச்சர்கள் வருகை புரிந்து பணிகளை சரிவர செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம். மேலும் முதல்வர் ஸ்டாலின் இந்த உத்தரவின் காரணமாக அனைத்து அமைச்சர்களும் தலைமைச் செயலகத்திற்கு வர தொடங்கியுள்ளதால் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டு வேலைகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகிறதாம்.