கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட சிறப்பு பணிக்குழுவுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா வைரஸ் நோய் தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க தலைமை செயலாளர் கீழ் சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறையின் செயலாளர்கள், தகவல் தொழிநுட்பத்துறையின் முதன்மை செயலாளர், தொழித்துறை மற்றும் போக்குவரத்துறையின் முதன்மை செயலாளர்கள், வருவாய் நிர்வாக ஆணையர், காவல்துறை இயக்குனர், மருத்துவ கல்வி இயக்குனர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையின் இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர்.
தென்னக ரயில்வே பொதுமேலாளர், சென்னை விமான நிலைய இயக்குனர், சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் தலைவர், பொது சுகாதாரத்துறையின் சார்பாக வல்லுநர்கள் குழுக்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவானது 4ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதியோடு ஊரடங்கு அமலில் இருக்கும். மேலும் பல்வேறு பணிகளை தொடங்க அனுமதி அளித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், மே 31ம் தேதிக்கு பிறகு என்னமாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே துறைவாரியாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பொது போக்குவரத்துக்கான அனுமதியும் விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு பொதுப்போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்படும் பொழுது, என்னமாதிரியான தரவு நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என்பது குறித்து எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பது நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.