இ – பாஸ் முறை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு இடங்களில் இயங்கி வரும் தடுப்பு முகாம்கள் மற்றும் பரிசோதனை மையங்களை பல்வேறு தலைவர்கள் சமீப காலங்களில் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள கொரோனா தடுப்பு முகாம் மற்றும் பரிசோதனை மையத்தை ஆய்வு செய்ய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்றிருந்தார்.
அதன்பின்அங்கு செய்தியாளரை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் 28 சதவீதம் அளவு கூடுதலாக தென்மேற்கு பருவமழை பெய்துள்ளதாக கூறினார். மேலும் பவானிசாகர், மணிமுத்தாறு, பெருஞ்சாணி, பெரியாறு, அமராவதி, திருமூர்த்தி ஆகிய அணைகளில் சென்ற ஆண்டைவிட நீரின் அளவு அதிகமாக உள்ளது என்றும், மேட்டூர், பாபநாசம், கிருஷ்ணகிரி, சோலையார் போன்ற அணைகளில் நீரின் அளவு சென்ற ஆண்டை விட குறைவாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு சென்ற ஆண்டை விட அதிகமாக இருப்பதாகவும் ஆர்.பி.உதயகுமார் குறிப்பிட்டார். மத்திய அரசின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தமிழகத்திலே பாஸ் முறையை ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து பேசிய அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இ- பாஸ் பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறார் விரைவில் அவர் அதுகுறித்து அறிவிப்பார் என்று கூறியுள்ளார்.