குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெற்றோர் கொடுக்கவேண்டிய உணவு வகைகள் பற்றிய தொகுப்பு
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் வேகமாக பரவி மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் கொரோனா அதிகம் தாக்கும் அபாயம் இருந்து வருகிறது. இந்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அளிப்பது அவசியமான ஒன்று. அவ்வகையில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள் பற்றிய சில குறிப்புகள், அவை
சிவப்பு குடைமிளகாய்
விட்டமின் சி அதிகம் உள்ள சிவப்பு குடைமிளகாய் பீட்டா கரோட்டின் நிறைந்தது.இது குழந்தைகளின் சருமத்திற்கும் அவர்களது கண்களுக்கும் பாதுகாப்பை அளிக்கக்கூடியது. இதில் இருக்கும் விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்கள் குழந்தைகளின் உடலில் வெள்ளை ரத்த அணுக்கள் உருவாக உதவி புரிகிறது. அதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி சிட்ரஸ் பழங்களில் அதிகம் நிறைந்துள்ளது.
இறைச்சி
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான ஒன்று இரும்புச்சத்து. இதனை இறைச்சியால் மட்டுமே அதிக அளவில் கொடுக்க முடியும். எனவே குழந்தைகளுக்கு இறைச்சி கொடுப்பதும் அவசியம்.
பருப்பு வகைகள்
குழந்தைகளுக்கு உணவு வகைகளை தயார் செய்யும் பொழுது நிச்சயம் சுண்டல் பயிறு போன்ற உணவுகளையும் சேர்த்துக் கொள்வது அவசியமான ஒன்று. காரணம் அவை குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவி புரிகிறது.
தயிர்
குழந்தைகளின் குடலை ஆரோக்கியமாக வைக்க தயிர் உதவுகிறது. தயிர் ப்ரோபயாடிக் கூறுகள் நிறைந்த ஒன்று. எனவே தயங்காமல் உணவில் சேர்த்துக் கொடுக்கலாம்.
அவகோடா பழம்
விட்டமின் ஈ நிறைந்த அவகோடா பழம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் பயன்படுகிறது.
சூரியகாந்தி விதைகள்
காலை உணவாக சூரியகாந்தி விதைகளை கொடுத்து வருவதால் இரும்பு சத்து மற்றும் விட்டமின்கள் குழந்தைகளுக்கு கிடைக்கப்பெற்று நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் ஆகின்றது.
பாதாம் பருப்பு
ஒரு நாளைக்கு சில பாதாம் பருப்புகளை கொடுத்துவர குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.