கனடாவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு குழந்தை உயிரிழந்த வழக்கில் கவனக்குறைவாக இருந்தாக தாயின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் வசிக்கும் Michelle Hanson என்ற பெண், தன் மூன்று வயது மகனுடன் வாகனத்தில் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில், அதிக வெள்ளம் சூழ்ந்து காணப்பட்ட சாலையில் வாகனத்தை இயக்கியிருக்கிறார். அந்த சாலை அடைக்கப்பட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதனை மீறி, அவர் அந்த சாலையில் சென்றதால், நீரின் வேகம் அதிகரித்து, Amaranth என்ற இடத்தின் அருகே இருக்கும், Grand River-க்குள் வாகனம் அடித்து செல்லப்பட்டது. அப்போது அவர் தடுமாறிய நிலையில், மகனை தூக்கிக்கொண்டு வாகனத்திலிருந்து வெளியேறினார். ஆனால், தண்ணீரின் வேகம் அதிகரித்ததால், இருவரையும் அடித்து சென்றது.
அப்போது குழந்தையை பிடிக்க முடியாமல் அவர் கையை விட்டுவிட்டார். அதன்பின்பு, மீட்புகுழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, Michelle-ஐ காப்பாற்றிவிட்டனர். ஆனால் குழந்தையை காணவில்லை. மருத்துவ பரிசோதனையில் Michelle ஆல்கஹால் அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் சிறுவனை தேடிவந்த, மீட்புக்குழுவினர் இரண்டு மாதங்களாகப் போராடி சிறுவனின் உடலை மீட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நேற்று, காணொலிக் காட்சி மூலமாக நீதிமன்றத்தில் Michelle ஆஜரானார்.
அவரிடம், நீதிபதி உங்கள் கவனக்குறைவால் தான் குழந்தை இறந்தது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? என்று கேட்டதற்கு, அழுது கொண்டே அவர் ஆம் என்று கூறினார். இந்த வழக்கிற்கான தீர்ப்பு, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 18ஆம் தேதியன்று ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.