தண்ணீர் நிரம்பிய வாளியினுள் இரண்டரை வயது சிறுவன் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் இருக்கும் கக்கன் நகரை சேர்ந்தவர் ஜெபஸ்தியான்-கற்பகம் தம்பதியினர். ஜெபஸ்தியான் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். கற்பகம் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் ஆரோன்தாஸ் என்ற சிறுவனுக்கு இரண்டரை வயது ஆகின்றது.
கணவன் மனைவி இருவரும் குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். மதிய உணவு இடைவேளைக்காக வீட்டில் வந்து பார்த்தபோது ஆரோன்தாஸ் என்று இரண்டரை வயது சிறுவனை காணவில்லை. இருவரும் அந்த பகுதியில் தேடிப்பார்த்தும் சிறுவன் கிடைக்காததால் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது தண்ணீர் நிரம்பிய வாளியினுள் சிறுவன் தலைகீழாக கிடந்துள்ளார்.
உடனே இருவரும் சிறுவனை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சங்கரன்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.