18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்ததை சமூகநலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே கிராம பகுதி ஒன்றில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் செய்ய இருப்பதாக அடையாளம் தெரியாத நபர் மூலம் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் சமூக நல ஆர்வலர் சைல்டு லைன் உறுப்பினர் மற்றும் காவல்துறையினர் துத்திப்பட்டு பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிளஸ்-1 படித்து கொண்டிருந்த மாணவியின் படிப்பை நிறுத்தி வருகிற 26-ஆம் தேதி அந்த சிறுமியை உறவினர் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி 18 வயது பூர்த்தி அடைந்த பின்னரே பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோரிடம் எழுதி வாங்கிக்கொண்டு மணமகன் வீட்டிற்கும் தகவல் கொடுத்தனர் நலத்துறை அதிகாரிகள். பின்னர் சிறுமியை மீட்டு வேலூரில் இருக்கும் அரசு பிற்காப்பு இல்லத்தில் சேர்த்துவிட்டனர்.