குழந்தை திருமணம் நடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள நாகநாதபுரம் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் கோவிந்தராஜன் என்ற வாலிபருக்கும் 9-ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட சைல்டு லைன் அமைப்பினருக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சைல்டு லைன் அமைப்பினர் சிறுமியின் பெற்றோரை அழைத்து பேசியுள்ளனர்.
அப்போது சிறுமிக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றம் என பெற்றோரை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதற்கு திருமணத்தை நிறுத்துவதாகவும், குழந்தைகள் நலக்குழு முன்பு சிறுமியை ஆஜர்படுத்துவதாகவும் அவரது பெற்றோர் உறுதியளித்தனர். ஆனால் சிறுமியை சைல்டு லைன் அமைப்பினர் முன்பு அவரது பெற்றோர் ஆஜர்படுத்தவில்லை.
இதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடத்திய விசாரணையில் திட்டமிட்டபடி 9-ஆம் தேதி சிறுமிக்கு திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் கோவிந்தராஜன், அவரது குடும்பத்தினர், சிறுமியின் தாய், தந்தை உட்பட 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.