குழந்தைகளின் உடலில் அறிகுறி இல்லாமல் வைரஸ் வெகு காலம் இருப்பதால் தொற்றை பரப்புவதில் குழந்தைகள் முக்கிய காரணிகளாக இருக்கின்றனர்
உலக நாடுகள் முழுவதிலும் தொற்றின் தாக்கம் அதிகரித்து ஏராளமான உயிர்கள் பலியாகி உள்ளது. இதனை தடுக்க பல்வேறு மருத்துவ நிபுணர்கள் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று தொற்று குறித்த முழுமையான தகவல்களை தெரிந்து கொள்வதற்கான ஆய்வுகளும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக எந்த வயதினரை பாதிக்கும், எத்தனை நாட்கள் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருக்கும் இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தொற்றினால் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர்.
அது அவர்களின் உடலில் எத்தனை நாட்கள் இருக்கின்றது போன்றவை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. தென்கொரியாவில் 22 மருத்துவமனையில் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த 91 குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 20 சதவீதத்தினர் முதலில் அறிகுறி இல்லாமல் பின்னர் அறிகுறிகள் தோன்றியவர்கள். 22 சதவீத குழந்தைகளுக்கு அறிகுறிகள் இல்லை. மீதி இருக்கும் 58 சதவீத குழந்தைகளுக்கு ஆரம்ப முதலே அறிகுறிகள் இருந்துள்ளது. பல்வேறு மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவு குழந்தை மருத்துவ பத்திரிகையில் வெளியானது.
அதில் வைரஸ் குழந்தைகளின் உடலில் எத்தனை நாட்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அனைத்து குழந்தைகளுக்கும் 2 1/2 வாரங்கள் சராசரியாக பாதிப்பு இருந்துள்ளது. அதில் அறிகுறி இல்லாத குழந்தைகளில் ஐந்தில் ஒரு பகுதியினருக்கும், அறிகுறி இருக்கும் குழந்தைகளில் 50 சதவீதத்தினருக்கும் மூன்று வாரங்களுக்கும் மேல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அறிகுறிகள் இல்லாமல் பல வாரங்கள் இருக்க முடியும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதோடு அறிகுறி இல்லாத குழந்தைகள் வெகு நாட்கள் வைரஸின் வாழ்விடமாக இருந்துள்ளனர். இதனால் மிகவும் சுலபமாக தொற்றை பரப்பும் காரணிகளாக குழந்தைகள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக நிபுணர்கள் கூறுகையில் “தொற்று பரவுவதில் குழந்தைகளுக்கு முக்கிய பங்கு இருக்கலாம். காரணம் அறிகுறிகள் ஏதும் இல்லாமலோ அல்லது அறிகுறிகள் சரியான பிறகும் எதிர்பார்க்க முடியாத வகையில் அவற்றின் மரபணுக்கள் குழந்தைகளின் உடலில் வெகுகாலத்திற்கு இருக்கின்றன” என கூறியுள்ளார்.