பாகிஸ்தானில் மூன்று குழந்தைகள் கையெறி குண்டை விளையாட்டு பந்து என்று நினைத்து விளையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் 10-14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் கையெறி குண்டை விளையாட்டு பந்து என்று நினைத்து தூக்கி எறிந்து விளையாடியதில் அந்த கையெறி குண்டு வெடித்துள்ளது. பாகிஸ்தானிற்கு கையெறி குண்டுகள் ஆப்கானிஸ்தானிலிருந்து கள்ளச்சந்தை மூலமாக கொண்டுவரப்படுகின்றன. அவற்றை பாகிஸ்தானில் உள்ள குழந்தைகள் பலர் விளையாட்டு பந்து என்று எண்ணி விளையாடியதில் பெரும்பாலான குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாக பாகிஸ்தான் காவல்துறையினர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் காவல்துறை அதிகாரி ஹிதாயத்துல்லா அந்த கையெறி குண்டு குவெட்டா நகரில் உள்ள அக்ராட் அபாட் என்ற பகுதியில் வெடித்துள்ளதாகவும், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் கலவரங்களும், வன்முறைகளும், குண்டுவெடிப்புகளும் எப்போதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இங்கு கையெறி குண்டுகளை பிரிவினைவாதிகள் ராணுவத்தினர் மீது வீசுவதும், தற்கொலை தாக்குதல் நிகழ்த்துவதும் இயல்பான ஒன்றாகும்.
மேலும் பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து செல்வதற்காக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இங்கு இஸ்லாமிக் ஸ்டேட் மற்றும் பாகிஸ்தான் தலிபான்கள் தீவிரவாதத்தின் கையும் தற்போது ஓங்கியுள்ளது. இதுகுறித்து சர்வதேச குழந்தைகள் நல அமைப்பான யூனிசெஃப், இந்த பகுதியில் கையெறி குண்டுகள், நாட்டு வெடிகுண்டுகள் ஆகியவற்றின் தயாரிப்பு குடிசை தொழில் போல் நடந்து வருவதால் ஏராளமான குழந்தைகள் இதில் சிக்கி விடுகின்றனர் என்று தெரிவித்துள்ளது.