தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி சென்னை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருவிக நகர் தொகுதியில் உள்ள ஆடுதொட்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் வாய்ச்சொல் வீரராக விளம்பர பிரியராக மட்டுமே இருக்கிறார்.
அவருடைய தொகுதி கொளத்தூர் கன்னி தீவாக மாறி உள்ளது. இதை குளம் ஊர் என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் அனைவரும் எப்போது திமுக அரசின் ஆட்சியில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள். தற்போது பெய்த மழையினால் ஓரளவு தண்ணீர் வற்றி இருப்பதற்கு காரணம் அதிமுக அரசியல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மட்டும்தான். மழையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு திமுக எந்த உதவியும் செய்யவில்லை. 2000 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேல் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் பாதிக்கும் மேல் அதிமுக ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்டவை தான். ஆனால் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திமுக தான் எல்லாம் செய்தது போன்று முதலமைச்சருக்கு சிங் சாங் அடித்து வருகிறார். அதிமுக ஆட்சிக்காலத்தின் போது அதிநவீன கருவிகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மட்டும் தான் திமுக காப்பாற்றியுள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலோடு கண்டிப்பாக தமிழகத்திற்கும் சட்டமன்ற தேர்தல் வரும். அதில் அதிமுக கட்சி தான் வெற்றி பெறும் என்று கூறினார்.