அமெரிக்கா தொடுத்த வழக்கும் ஜெர்மனி கேட்ட இழப்பீடும் அபத்தமானது என்று சீனா பதிலளித்துள்ளது
கொரோனா தொற்று தொடர்பாக அமெரிக்கா சீனா மீது வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு அபத்தமானது என்று சீனா பதிலளித்துள்ளது. கொரோனா காரணமாக தங்கள் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட சீனா 149 பில்லியன் யூரோ வழங்க வேண்டும் என ஜெர்மனி பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதே போன்று கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை கண்டறிய விசாரணை குழு ஒன்றை சீனாவிற்கு அனுப்ப இருப்பதாக அறிவித்து இருந்தது.
இந்நிலையில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா மிசோரி மாகாணத்தில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் ஜெர்மனி வெறுப்பை உமிழ்வதாகவும், உலகம் முழுவதையும் பாதிக்கும் ஒரு தீவிர தொற்று நோய் குறிப்பிட்ட ஒரு நாட்டை குறை கூறி இழப்பை ஈடு கேட்பது மோசமான செயல் என்றும் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. அதுபோன்று கொரோனா வைரஸ் தோன்றியது எவ்வாறு என்பதை கண்டறிய அமெரிக்க விசாரணை குழு வருமானால் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் சீனா தெரிவித்துள்ளது.
வைரசால் பாதிக்கப்பட்ட ஒரு நாடு அதை உருவாக்கியதாக கூறுவது உண்மையல்ல என்றும் கட்டுப்படுத்த தான் மேற்கொண்ட முயற்சிகளையும், மதிப்புமிக்க அனுபவத்தையும் உலக சமுதாயத்தின் முன்பு வெளிபடுத்தியதாகவும் சீனா கூறியுள்ளது. 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நிதி நெருக்கடி தான் உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஆக மாறியது என்று குறிப்பிட்டுள்ள சீனா, அதற்கு அமெரிக்கா தான் பொறுப்பேற்க வேண்டும் என யாராவது கேட்டார்களா என்றும் கேள்வி எழுப்பியது. அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு அபத்தமானது என்றும் இந்த குற்றச்சாட்டு சர்வதேச ஒத்துழைப்புக்கு எதிரானது எனவும் சீனா கூறியது.