இதுவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் மட்டும் 2, 592 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் வூஹானில் தான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின் கொரோனா தனது வேகத்தை காட்டத் தொடங்கியது. அந்நாட்டின் பீஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் வூஹான் மாகாணத்தில் அதிவேகமாக பரவி அடுத்தடுத்து மக்களை கொன்று குவித்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல் சீன பெருஞ்சுவரையும் தாண்டி உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.சீனாவில் நேற்று வரை மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் 2,592 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,150 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் தென்கொரியாவிலும் ஆதிக்கம் செலுத்தி அதிவேகமாக பரவ தொடங்கியுள்ளது. தென் கொரியாவில் 161 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தென்கொரியாவில் வைரஸ் பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 763 ஆக அதிகரித்துள்ளது.