சீன அரசு, ஜின்ஜியாங் மாகாணத்தில் வசிக்கும் உய்குர் முஸ்லீம்கள் மீது ஒடுக்குமுறை கையாள்வதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சீனாவின் ஜின்ஜியாங் என்ற மாகாணத்தில் இருக்கும் உய்குர் என்ற பிராந்தியத்தில் உய்குர் முஸ்லிம்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இவர்களை சீனா கொடுமை செய்வது, காரணமில்லாமல் முகாம்களில் அடைப்பது உட்பட பல மனித உரிமை மீறல்களை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் இதனை மறுத்துள்ள சீனா, அவர்களை முகாம்களில் அடைப்பது தீவிரவாதத்தை தடுப்பதற்கான செயல்பாடு என்று கூறியுள்ளது. மேலும் உய்குர் முஸ்லீம்களுக்கு திறமைகளை மேம்படுத்த பயிற்சி அளிக்கும் மையங்கள் தான் அது என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் அம்னெஸ்டி என்ற மனித உரிமைகள் அமைப்பு ஜின்ஜியாங் மாகாணத்தில் நடக்கும் மனித உரிமை மீறல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் சீனா, மக்களை துன்புறுத்தி வருவதாக கூறியுள்ளது. இது தொடர்பில் விரிவான விசாரணையை ஐநா நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் இதற்கு முன்பு கைதிகளாக இருந்த 55 நபர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் சர்வதேச சட்டத்திற்குரிய அடிப்படை கட்டுப்பாடுகளை மீறி சிறைதண்டனைகள், கொடுமைகள் போன்ற குற்றங்களை சீனா செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.