சீன நாடு தைவான்-அமெரிக்கா அரசு ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
கடந்த வருடம் சீனா தனது தேசிய பாதுகாப்பு சட்டம் மூலமாக சிறிய தீவு நாடான தைவானை கைப்பற்ற எண்ணியது. மேலும் சீனா அவ்வப்போது ஜனநாயக நாடான தைவானில் அத்துமீறி நுழைந்து வந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் சீன வீரர்கள் தைவான் விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றுடன் மோதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். எனவே சீனாவிடமிருந்து தப்பிக்க அமெரிக்காவின் உதவியை நாடிய தைவான் பல்வேறு பாதுகாப்பு ஒப்பந்தங்களையும் அமெரிக்காவுடன் மேற்கொள்ள ஈடுபட்டது.
இதற்கிடையே சீனாவின் மனித உரிமை மீறல்கள், தைவான் ஜலசந்தியில் ஸ்திரத்தன்மையும் அமைதியையும் ஏற்படுவதற்கு தடையாக உள்ளதால் ஜி 7 மாநாட்டில் அதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தைவான்-அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சீனா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது. தைவான்-அமெரிக்க அரசு ராணுவ ஒப்பந்தம் செய்துகொள்வது என்பது சீனாவிற்கு எதிராக போர் தொடுப்பதற்கு சமமாகும். எனவே அமெரிக்கா, ஒன்றிணைந்த சீனா என்ற கோட்பாட்டை மதிக்குமாறு அந்நாட்டிற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.