சீனா, இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மேலும் 15 இடங்களுக்கு சீன பெயர்களை சூட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சீனா, இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை ‘தெற்கு திபெத்’ என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது. இதனை தொடர்ந்து எதிர்த்து வரும் மத்திய அரசு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தான் அருணாச்சல பிரதேச மாநிலம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. இருப்பினும் சீனா தற்போது அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மேலும் 15 இடங்களுக்கு சீன பெயர்களை வைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 4 மலைகள், 8 குடியிருப்பு பகுதிகள், ஒரு மலைக்கணவாய், இரண்டு ஆறுகள் உள்ளிட்ட இடங்களுக்கு திபெத், சீன மற்றும் ரோமன் எழுத்துக்களில் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சீன சிவில் விவகாரத்துறை அமைச்சகம் இந்த பெயர்கள் அனைத்தும் சீனாவின் மாநில கவுன்சில் மற்றும் அமைச்சரவை வழங்கிய புதிய பெயர்கள் மீதான விதிமுறைகளுக்கு இணங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் சீனா ஏற்கனவே கடந்த 2019-ஆம் ஆண்டில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஆறு பகுதிகளுக்கு சீன பெயர்களை சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.