உலக சுகாதார நிறுவனம் சீனாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே உலக மக்களை கொரோனா குறித்து தாமதமாக எச்சரித்த உண்மை தகவல் வெளியாகியுள்ளது
சீனாவில் தொடங்கிய கொரோனாவால் உலக நாடுகள் முழுவதும் பெருமளவு பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று பரவும் என்ற உண்மையை தாமதமாக கூறியதாகவும் குற்றம் சுமத்தி வந்தார். இந்த கொரோனா விவகாரத்தில் சீனா அதிபர் ஜின்பிங் உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸுடன் தனிப்பட்ட முறையில் கடந்த ஜனவரி மாதம் ஆலோசனை செய்தது தெரியவந்துள்ளது.
ஜனவரி மாதம் 21ஆம் தேதி மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று பரவும் தகவலை வெளியிட வேண்டாமென ஜின்பிங் டெட்ரோஸிடம் கோரிக்கையாக முன்வைத்தது என்பதும் இதனால் கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள ஆறு வாரங்கள் பின்தங்கியது என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது வெளியான இந்த குற்றச்சாட்டுக்களை உலக சுகாதார அமைப்பு மறுத்ததோடு இது ஆதாரமில்லாத பிதற்றல் என குறிப்பிட்டுள்ளது.
ஜனவரி 21ஆம் தேதி சீன அதிபருடன் தொலைபேசியில் பேசியதாக கூறுவது உண்மைக்குப் புறம்பான தகவல். இவ்வாறு வெளியாகும் ஈடுகட்டும் கதைகள் கொரோனாவுக்கு எதிரான போராட்டங்களை மழுங்கடிக்கச் செய்யும் என எச்சரித்ததோடு சீனா தொற்றின் அபாயம் குறித்து ஜனவரி 20ஆம் தேதி தங்களிடம் கூறியதாகவும் ஜனவரி 22ஆம் தேதி உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் தங்கள் அறிக்கையில் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அதிபர் டிரம்ப் சீனாவுக்கு எதிராகவும் உலக சுகாதார அமைப்பிற்கு எதிராகவும் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்த நிலையில் ஜெர்மனியில் வெளியான பத்திரிக்கைகள் அரசாங்க உளவு அமைப்புகளின் தகவல் அடிப்படையில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.