சீனாவின் பிரபலமான சமூக வலைத்தளத்தில் இருந்து எல்லை பிரச்சினை தொடர்பான பிரதமர் மோடியின் கருத்து நீக்கப்பட்டுள்ளது
கடந்த 15ஆம் தேதி இந்திய எல்லைக்கு உட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்களும் சீன ராணுவத்தை சேர்ந்த 35 பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. மோதலில் உயிர்பலி அதிகம் ஏற்பட்டதால் இப்பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமாக தீர்ப்பதற்கு இரண்டு நாடுகளிடையே முயற்சிகள் நடந்து வருகின்றது.
இந்நிலையில் எல்லைப் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்களை சீனா அதன் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியுள்ளது. சீனாவில் மக்களால் அதிகம் உபயோகப்படுத்தும் செயலிகளில் ஒன்று WeChat. பிரதமர் மோடியின் எல்லை பிரச்சனை தொடர்பான உரை WeChat செயலியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த ஊடகம் சார்பாக கூறியபோது அரசு ரகசியங்களை தெரிவிக்கக் கூடாது.
தேசத்தின் பாதுகாப்பிற்கு எந்த ஆபத்தும் நேர்ந்து விடக்கூடாது என்ற காரணத்தினால் பதிவுகளை நீக்கினோம் என தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இந்தியாவின் அதிகாரப்பூர்வ கணக்கில் வெளியிடப்பட்ட சீனா-இந்தியா எல்லை நிலவரம் பற்றிய மோடியின் கருத்து, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தொலைபேசியில் பேசிக்கொண்ட உரையாடல் போன்றவை WeChat செயலியில் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.