சீனா அவசர அவசரமாக உணவு பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெயை அதிக அளவில் சேகரித்து வைக்க தொடங்கியுள்ளது
கொரோனா தொற்று முதன்முதலில் பரவத்தொடங்கியது சீனாவின் வூஹான் நகரில் அங்கிருந்து பரவிய தொற்று உலக நாடுகள் பலவற்றிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் சீனாவில் இயல்பு வாழ்க்கை இப்போது தொடங்கிவிட்டது. மூடப்பட்ட தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு தயாரிப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றது. சீனாவில் கொரோனா பரவியதை தொடர்ந்து 200 கோடி முக கவசங்களை இதர நாடுகளில் இருக்கும் சீன நிறுவனங்கள் அனுப்பி வைத்துள்ளது.
கடந்த 29ஆம் தேதி நிலவரப்படி 240 கோடி முக கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் சீனாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.சுங்க அதிகாரிகளின் சோதனைக்கு பின்னர் அவை அதிக விலைக்கு உலக நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. இது உலக சுகாதார நிறுவனத்தின் மேற்பார்வையிலேயே நடந்தேறியது.கொரோனா பரவலின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் கச்சா எண்ணெயின் தேவை குறைந்துள்ளது.
கச்சா எண்ணெயின் உற்பத்தி அதிகமாக இருந்தாலும் தேவை இல்லாத காரணத்தினால் விலை அதிக அளவு குறைந்துள்ளது. வாகன போக்குவரத்து குறைந்துள்ளதால் பல நாடுகள் கச்சா எண்ணையை சேமித்துவைக்க திணறி வருகின்றனர். இந்த நிலையில் சீனா வழக்கத்திற்கு மாறாக அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் கச்சா எண்ணெய் இறக்குமதியை 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
மொத்த எண்ணெய் கொள்ளளவில் 65 சதவீத எண்ணெய்யை சீனா சேமித்து வைத்திருப்பதாக புள்ளிவிபரம் குறிக்கின்றது. அதுமட்டுமல்லாது எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை பிரம்மாண்டமாக சீனா கட்டி வருகின்றது. கச்சா எண்ணெய் தேவைக்கு பிற நாடுகளை சார்ந்து இருக்க வேண்டாம் என்ற முடிவே சீனா இவ்வாறு செய்ததற்கு காரணம் என்றும் கூறப்படுகின்றது. கொரோனா தொற்றினால் பஞ்சம் ஏற்படும் என பல ஆய்வுகளில் தெரிய வந்ததால் சீனா இப்போதே உணவு தானியங்களை சேகரித்து வருகின்றது.
கோடி டன் எடை கொண்ட சோயா ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு கோடி டன் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது. அதேபோன்று 10 லட்சம் டன் பருத்தி, ஒரு கோடி டன் சோளம் போன்றவையும் சீனா கிடங்கில் சேர்த்துள்ளது. 2017 ஆம் ஆண்டு வாங்கியதை விட இந்த ஆண்டு 93 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அமெரிக்காவிடம் இருந்து உணவுப் பொருட்களை வாங்க ஒப்பந்தம் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார சரிவை சந்தித்த நாடுகளில் சந்தை மதிப்பு சரிவடைந்த நிறுவனங்களை வளைத்துப் போட சீனா முயற்சி செய்து வருகின்றது. சமீபத்தில் இந்தியாவின் வீட்டுக்கடன் நிறுவனமான எச்.டி.எப்.சி நிறுவனத்தின் ஒரு சதவீத பங்கை சீன மத்திய அரசு ரூ 3000 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதனால் சுதாரித்துக்கொண்ட இந்தியா, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அரசின் அனுமதி இல்லாமல் நேரடி முதலீடு செய்ய தடைசெய்யப்பட்டுள்ளது.