ஆஸ்திரேலியா, தங்கள் கடற்படை விமானத்தை சீனா லேசர் மூலமாக குறிவைத்தற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சீனா, தென் சீன கடல் பகுதி முழுக்க தங்களுக்குரியது என்று கூறுவதோடு, பிற நாடுகளின் போர்க் கப்பல்களையும், கப்பல்களையும் எல்லை பகுதிக்குள் வர விடாமல் தடை செய்திருக்கிறது. அதனை மீறி எல்லைப் பகுதிக்கு வரும் கப்பல்களை தங்கள் போர்க் கப்பல்கள் மூலமாக தடுத்துக் கொண்டிருக்கிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அமெரிக்கா தங்களின் விமானம் தாங்கி கப்பல்கள், போர்க்கப்பல்கள் போன்றவற்றை தென்சீனக் கடல் பகுதிக்கு அனுப்புகிறது. இந்நிலையில் அமெரிக்காவினுடைய நட்பு நாடாக திகழும் ஆஸ்திரேலியா, தென் சீன கடல் பகுதியில் சோதனை பணியை மேற்கொண்டிருந்த தங்கள் நாட்டு கடற்படை விமானத்தை அழிப்பதற்காக சீனாவை சேர்ந்த போர்க்கப்பல் மின்காந்த அலை ஒளிக்கற்றை மூலமாக குறிவைத்தது என்று குற்றம் சாட்டியிருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் பவளக் கடல் பகுதியில் சீனாவின் 2 போர்க்கப்பல்கள் முகாமிட்டிருக்கின்றன. இது போன்று மின்காந்த அலை ஒளிக்கற்றை மூலமாக குறி வைத்தால் விமானத்திற்கு ஆபத்து ஏற்படுவதோடு சில சமயங்களில் விமானிகளின் கண்பார்வையும் பாதிப்படையும் என்று ஆஸ்திரேலியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சீனாவின் இந்த செயல்பாட்டை அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள் கடுமையாக எதிர்த்துள்ளன.