2003ஆம் ஆண்டு சீனாவை உலுக்கிய சார்ஸ் நோய் (Severe Acute Respiratory Syndrome – SARS), 17 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவை மீண்டும் கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஒருவித கொடிய வைரஸால் இந்நோய் ஏற்படுகிறது.
கொரோனா வைரஸானது மனிதர்களின் சுவாச உறுப்பான நுரையீரலை நேரடியாகத் தாக்குவதால், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட இந்நோய், 37 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. 2003இல் சீனாவில் மட்டும் 650 பேர் இந்நோயால் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் சுகாதார அமைச்சகம் வெளியுறவுத் துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொச்சி சர்வதேச விமான நிலையங்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து இந்தியாவுக்கு பயணம் செய்ய விசா கோரும் விண்ணப்பதாரர்களுக்கு ஆலோசனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் அதை ஒட்டிய நாடுகளுக்கு பயண ஆலோசனைகளை உள்ளூர் மொழிகளில் வழங்கிடவும் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.