கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் தயாரிக்கப்படவில்லை விலங்குகளிடமிருந்து வந்திருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகையே மிரட்டி மக்களை மரண அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொடூர கொரோனா வைரஸ் சீனா நாட்டின் உகானின் கடல் உணவு சந்தையில் இருந்த விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதாக உலக நாடுகளால் நம்பப்படுகின்றது.ஏனென்றால் இதான் தாக்கம் முதல் முதலாக அங்கு தான் இருந்தது. ஆனாலும் இந்த சந்தையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் யார் என்று அடையாளம் காணும் பணியில் சீனா இதுவரை ஈடுபட்டு வருகின்றது.
கடந்த 2019ஆம் ஆண்டில் சீன நகரான உகானை மையம் கொண்டு ஆயிரக்கணக்கான பாதிப்பை உண்டாக்கிய கொரோனாவின் பிடியில் இன்று உலகளவில் 24 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிக்கியுள்ளனர். 165,000-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். உலக வல்லரசு நாடான அமெரிக்காதான் 40,000-க்கும் அதிகமான உயிரிழப்புகளை சந்தித்து உலகளவில் பாதிப்பு பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது. இதனால் தான் கொரோனா தொற்று தொடர்பாக சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான விமர்சனங்களை அள்ளி வீசினார்.
உலக சுகாதார அமைப்பையும் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறிய அமெரிக்கா அதிபர் டிரம்ப், அமெரிக்கா அளித்து வந்த நிதியை நிறுத்துவதாக அறிவித்து உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. உலக சுகாதார அமைப்பும் கொரோனா விலங்கு சந்தையில் இருந்து தான் மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று நம்பி வருகின்றது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஃபடெலா சாயிப் கூறும் போது,
கொரோனா பரவியதற்கான சரியான ஆதாரம் இன்னும் கிடைக்கவில்லை. இது சீன நாட்டின் ஆய்வகத்தில் தயாரிக்கப்படவில்லை. கிடைத்துள்ள அனைத்து ஆதாரங்களின்படி கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து தான் மனிதனுக்கு வந்திருக்கலாம் என்று தெளிவாகிறது. ஏப்ரல் 20-ம் தேதி முதல் உலகசுகாதார அமைப்பு கொரோனா குறித்த எச்சரிக்கை விடுத்து வருகின்றோம். அமெரிக்காவிடம் கொரோனா பற்றி எதையும் மறைக்கவில்லை என்று தெரிவித்தார்.
அமெரிக்கா அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருவது, உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றது. சீனாவில் கொரோனா பரவினாலும் உலக சுகாதார அமைப்பு சீனாவை கண்டுகொள்ள மறுக்கின்றது. இது சீனாவால் உருவாக்கப்பட்ட சீன வைரஸ் என்று தொடர்ந்து கூறி வந்த நிலையில் தற்போது உலக சுகாதார அமைப்பு கொரோனா சீனாவில் உருவாக்கப்பட்டது இல்லை என்று கூறியதையும் எப்படி எடுத்துக்கொள்வார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.