சீனாவில் ஹோம்வர்க்கை தடை செய்து மாணவர்களின் அழுத்தத்தை குறைக்க புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஹோம்வர்க் மற்றும் டியூசன் ஆகிய இரு அழுத்தங்களை மாணவர்கள் இடையே குறைக்கும் வகையில் புதிய கல்வி சட்டம் ஒன்று இந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதை தடுக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, இணையப் பிரபலங்கள் மீதான இளைஞர்களின் கண்மூடித்தனமான அபிமானத்தை கட்டுப்படுத்தவே சீனா இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன்படி சமீபத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களில், ஒரு மணிநேரம் மட்டும் சிறுவர்கள் ஆன்லைன் கேம் விளையாட அனுமதி என சீனாவின் கல்வி அமைச்சகம் அறிவித்தது. மேலும் கடந்த திங்கள் கிழமை அன்று சீன நாடாளுமன்றம், குழந்தைகள் தவறான நடத்தைகளிலோ அல்லது குற்றச்செயல்களிலோ ஈடுபட்டால் அவர்களின் பெற்றோர்களை தண்டிக்கும் வகையில் புதிய சட்டத்தை பரிசீலிப்பதாக கூறியது.
இந்த நிலையில் சீனாவில் தற்போது நிறைவேற்றப்பட்ட புதிய சட்டம், மாணவர்களின் அழுத்தத்தை குறைக்கப்படுவதை உறுதி செய்யும் விதமாக உள்ளூர் அரசாங்கத்தை பொறுப்பேற்க செய்கிறது. மேலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் நேரத்தை ஓய்வு மற்றும் உடற்பயிற்சிக்கு செலவிட ஏற்பாடு செய்யும்படியும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய சட்டம் வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில், மாணவர்களின் ஹோம்வர்க்கை குறைப்பதோடு டியூசன் கற்பிப்பதையும் தடை செய்கிறது.