சீனாவில் மர்ம நபரால் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் உகான் நகரில் உள்ள காய்டியான் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் மக்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அந்த சமயம், அங்கு கையில் கத்தியுடன் வந்த மர்ம நபர் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களை சரமாரியாக குத்தினார். இதனால், அந்த பகுதி மக்களிடையே பெரும் பதற்றமும் பீதியும் உருவானது.
மேலும் மக்கள் அனைவரும் தங்களின் உயிரை காப்பாற்றி கொள்ள அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். ஆனாலும் அந்த மர்ம நபர் அவர்களை விடாமல், விரட்டி சென்று கத்தியால் கண்மூடித்தனமாக குத்தினார். இந்த தாக்குதலில் 7 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர், தாக்குதல் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனால், போலீசாரை பார்த்ததும் தாக்குதல் நடத்திய மர்ம நபர் அங்குள்ள பாலத்தின் மேல் ஏறி ஆற்றில் குதித்து தப்பியுள்ளார். இந்த நிலையில், கத்திக்குத்து நடத்தி தப்பியோடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடும் பணியில் இறங்கியுள்ளனர். மேலும், இந்த தாக்குதலின் பின்னணி என்ன என்பது குறித்தும் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.