சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை இந்த ஆண்டில் குறைந்துள்ளதால் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் மக்களவையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியா நாட்டின் வர்த்தக பற்றாக்குறையானது சீனாவுடன் இந்த ஆண்டில் குறைந்துள்ளதால் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பாட்டீல் மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில் இந்தியாவிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி 1675 கோடி டாலராகவும் , 2019-20 ஆம் நிதியாண்டில் 1661 கோடி டாலராகவும், 2020-21 ஆம் நிதியாண்டில் 2119 கோடி டாலராகவும் இருந்தது. இதே போன்று சீனாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி 2018- 19 ஆம் ஆண்டில் 7032 கோடி டாலராகவும் 2019-20 ஆம் ஆண்டில் 6526 கோடி டாலராகவும் 2020-21ஆம் ஆண்டில் 6521 கோடி டாலராக இருந்தது.
மேலும் 2018-19 ஆம் ஆண்டில் 5357 கோடி டாலராக இருந்த சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 2020-21 நிதியாண்டில் 4402 கோடி டாலராக குறைந்துள்ளது” என தெரிவித்துள்ளார். இதனையடுத்து மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் ஜவுளித் துறையில் நேரடியாக செய்யப்பட்ட அந்நிய முதலீட்டை குறித்து மக்களவையில் அறிக்கை வெளியிட்டார். அதில் “கடந்த 2018-19 ஆம் ஆண்டில் இந்தியா ஜவுளித்துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் அளவானது 32.35 கோடி டாலராக இருந்தது. ஆனால் கடந்த 2020-21 ஆம் நிதியாண்டில் 29.86 கோடி டாலருக்கு அன்னிய நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தானியங்கி வழிமுறையின் மூலம் அந்நிய நேரடி முதலீட்டை ஜவுளித்துறையில் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும் கூறியுள்ளார்.