கொரோனா வைரசின் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் முதன் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனவால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது சீனா முன்பை விட கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டது. ஆம், நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் வூஹான் நகரில் சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஹூபே மாகாணத்தில் வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் தாக்கம் கணிசமான அளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாகவும், வைரஸின் தீவிரப்போக்கைக் குறைத்து, நிலைமையை மாற்றியமைப்பதில் முதல் கட்ட வெற்றி பெற்றுள்ளதாகவும் அதிபர் ஜின்பிங் குறிப்பிட்டார்.