சீன நாடு மலேசியா, புரூணை, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான் ஆகிய நாடுகளுடைய நீர்வழி பகுதிகளை ஆக்கிரமிக்கும் விதமாக தென்சீன கடல் பகுதி முழுவதும் தனக்கு சொந்தம் என்று கூறி வருகிறது.
பிலிப்பைன் நீர்வழி பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 240 சீன கப்பல்கள் காணப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 270 கப்பல்களாக இருந்துள்ளது. எனினும் தென்சீன கடல் மற்றும் கிழக்குசீன கடல்பகுதியில் கடந்த சில மாதங்களாக சீன அரசானது நீர்வழி பயன்பாட்டை அதிகரித்துள்ளது. மேலும் சீனா, அமெரிக்க ராணுவத்தின் வருகையை முன்னிட்டு இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சீனாவின் 4 கப்பல்கள் கிழக்குச் சீனக் கடலில் ஜப்பானிய நாட்டின் கடல்வழி பகுதியில் அமைந்த சென்காகு தீவில் அத்துமீறி ஊடுருவியுள்ளது.
உட்சூரி மற்றும் தைஷோ தீவுகளின் கடல்வழி பகுதிகளில் இந்த கப்பல்கள் உள்ளே நுழைந்துள்ளதாக ஜப்பானிய கடலோர காவல்படை தகவல் வெளியிட்டுள்ளது. அந்த கப்பல்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 16-வது முறையாக சீன கப்பல்கள் எங்களது கடல்வழி பகுதியில் அமைந்த சென்காகு தீவிற்குள் அத்துமீறி நுழைவது ஆகும் என்று ஜப்பானிய கடலோர காவல்படை செய்தி குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளது.