Categories
உலக செய்திகள்

அவங்க பாதுகாப்பா தான் இருக்காங்க..! மாயமான டென்னிஸ் வீராங்கனை… ஆதாரத்தை வெளியிட்ட சீன ஊடகம்..!!

சீன அரசு ஊடகம் காணாமல் போன டென்னிஸ் வீராங்கனை பாதுகாப்பாக இருப்பதாக கூறி வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

சீனாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான பெங் சூவாய் ( 35 ) சமீபத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரும், சீனாவின் முன்னாள் துணை பிரதமருமான ஜாங் கோலி மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதன் பிறகு திடீரென காணாமல் போன பெங் சூவாய்-க்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. இருப்பினும் இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்ததோடு, டென்னிஸ் வீராங்கனை மாயமானதன் பின்னணியில் அதிபர் ஜின்பிங் தலைமையிலான அரசுக்கு பங்கு இருக்குமோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியது.

இதற்கிடையே ஐ.நா.வும், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பெங் சூவாய் எங்கு இருக்கிறார் ? அவருடைய பாதுகாப்பு குறித்த உண்மையான ஆதாரங்களை வெளியிடுமாறு சீனாவை வலியுறுத்தியுள்ளது. இதனால் சீன அரசுக்கு கடும் நெருக்கடி இருந்து வந்தது. இந்நிலையில் சீன அரசு ஊடகம் பெங் சூவாய் பாதுகாப்பாக இருப்பதாக கூறி வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் பெங் சூவாய் தலைநகர் பீஜிங்கில் நேற்று காலை நடைபெற்ற டீனேஜர் டென்னிஸ் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்றதாக கூறப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பெங் சூவாய் பயிற்சியாளர் மற்றும் நண்பர்களுடன் வெளியே சென்று உணவு அருந்துவது போன்ற வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் தலைவர் ஸ்டீவ் சிமோன் இந்த வீடியோக்கள் பெங் சூவாய் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமானது அல்ல என்று கூறியுள்ளார்.

Categories

Tech |