கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவ படைகள் பின்வாங்கி இருப்பதாக ANI செய்தி தகவல் வெளியிட்டுள்ளது.
லடாக் எல்லை பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீனா படைகள் மோதிக்கொண்டன. இதில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில் சீனா தரப்பில் 40 பேர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இதனை சீனா மறுத்துள்ளது. இந்த நிலையில் தான் இரண்டு நாட்டு ராணுவ வீரர்களுக்குமிடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில் கல்வான் பகுதியில் இருந்து இரு நாட்டு வீரர்களும் விலகிச் செல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கு காரணம் என்னவென்றால், அந்தப் பகுதியிலேயே இரண்டு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும் தொடர்ந்து முகாமிட்டிருந்தால் மீண்டும் மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. எனவே அதை தவிர்க்க வேண்டும். இரண்டு நாடுகளை சேர்ந்த வீரர்கள் அந்த பகுதியை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து தற்போது ஜூன் 22ம் தேதி சீனா உறுதி அளித்ததன் பேரில் தற்போது சீன படைகள் பின்வாங்கி உள்ளதாக ANI செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட சீன ராணுவ வாகனங்களும் திரும்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.