கொரோனா பாதிப்பால் சென்னையை வெறுத்து புறநகர் நோக்கி மக்கள் கூட்டம் படையெடுத்து செல்கிறது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தற்போது கொரோனாவின் தலைநகராக மாறிவருகிறது. இங்கே நாளுக்கு நாள் இந்த வைரஸின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வர, மக்களிடையே அச்சம் எழுந்து கொண்டே வருகிறது. இதனால் சென்னைக்கு பிழைப்பிற்காக வந்த பலரும் இங்கே வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், தங்களது சொந்த ஊருக்கு இ பாஸ் இல்லாமல் கூட வாங்காமல் சட்டவிரோதமாக தொடர்ந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
காவல்துறையினர் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க சென்னையில் வீடுகளுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து வீடுகள் அமைந்துள்ளதாலும், ஒரு சில பகுதிகளில் தெருக்களும் மிகக் குறுகிய அளவில் இருப்பதால் சமூக இடைவெளி என்பது அங்கே கேள்விக்குறியாகிறது. அதனை கடைபிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இது அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தங்களது வேலைவாய்ப்பு, பிள்ளைகளின் படிப்பு உள்ளிட்டவற்றை மையமாகக்கொண்டு சென்னையை நோக்கி படையெடுத்து வந்த மக்கள் தற்போது கொரோனா பாதிப்பால் வீட்டிலிருந்தே வேலை, குழந்தைகளுக்கும் ஆன்லைன் வகுப்பு என்றாகிவிட்ட நிலையில் சென்னையை வெறுத்து புறநகர் பகுதிகளுக்கும், சிலர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அருகாமையில் உள்ள எல்லைப் பகுதிகளுக்கும் படை எடுத்துச் செல்கின்றனர். இதன் காரணமாக முக்கிய பகுதிகளில் பல வீடுகளில் இங்கே வீடு வாடகைக்கு விடப்படும் என்ற போர்டு தொங்க விடப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு தரமான படிப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நல்ல எதிர்காலம் உள்ளிட்டவற்றை சிறப்பாக அமைத்துக் கொடுத்த எழில் மிகுந்த சென்னையை நன்கு பயன்படுத்திவிட்டு, தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட பின் அந்த ஊரை இழிவுபடுத்தி பேசுவதுடன், வேறு பகுதிகளுக்கு பயணம் செய்வதன் மூலம் நம்மால் பலருக்கு கொரோனா பரவும் என்பதை கூட கணக்கில் கொள்ளாமல், மக்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பை மட்டும் கருத்தில் கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது அவர்களது சுயநலத்தை காட்டுகிறது. என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.