சிரஞ்சுகளில் அடைக்கப்பட்ட சாக்லேட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் ஊசி போடுவதற்கு பயன்படும் சிரஞ்சுகளில் சாக்லேட்டுகள் அடைத்து விற்பனை செய்வதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் படி வேலூர் மாநகராட்சி நல அலுவலர் சித்திரசேனா மற்றும் அதிகாரிகள் காகிதப்பட்டறை சத்துவாச்சாரி போன்ற பகுதிகளில் இருக்கும் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் இருந்த சிரஞ்சுகளில் அடைக்கப்பட்ட சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து அந்த கடை வியாபாரியிடம் விசாரணை நடத்திய போது வேலூர் மார்க்கெட் பகுதியில் இருக்கும் மொத்த வியாபார கடையில் இருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதனை வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் மார்க்கெட் பகுதியில் இயங்கி வந்த மொத்த விற்பனை கடைகளில் சோதனை செய்த போது கடந்த ஆண்டு சிரஞ்சுகளில் அடைக்கப்பட்ட சாக்லேட்டுகள் விற்பனைக்கு வந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் அதிகாரிகள் இது போன்ற சாக்லேட் தின்பண்டங்களை விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் என மொத்த வியாபாரிகளை எச்சரித்துள்ளனர். அதன்பின் அதிகாரிகள் சிரஞ்சுகளில் அடைக்கப்பட்ட சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.