உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் டிசம்பர் 25-ம் தேதி இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடுவார்கள். இந்த பண்டிகையின் நோக்கம் அன்பை வெளிப்படுத்துவது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை தற்போது நெருங்கி வருவதால், தற்போது இருந்தே பண்டிகை கால ஷாப்பிங்கை மக்கள் தொடங்கிவிட்டனர். அந்த வகையில் தேவாலயங்களில் கிறிஸ்து பிறந்த குடில் அமைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள், வீடுகளில் நட்சத்திரங்கள் மற்றும் கிறிஸ்மஸ் மரம், வீடுகளில் குடில்கள் அமைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள் போன்றவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்குகிறார்கள்.
அதோடு கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே மிகச் சிறப்பானது கேக் தான். வீடுகள் மட்டும் இன்றி தேவாலயங்களிலும் கேக் வெட்டி கிறிஸ்மஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள். இதனால் தற்போது இருந்தே கேக் ஆர்டர் கொடுக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் சென்னையில் உள்ள பல கடைகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான ஷாப்பிங் செய்வதற்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடைகள் மற்றும் கேக் வழங்கப்படுவதோடு, ஆதரவற்றோர்களுக்கும் தேவாலயத்தின் சார்பில் அல்லது கிறிஸ்தவர்களின் சார்பில் தேவையான உதவிகள் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.