முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிறிஸ்தவ மக்களுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி இன்று வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், கிறிஸ்மஸ் தினமானது அன்பின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த நாளாகும். இந்த நாளை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயேசுபிரான் போதித்த அன்பு, தியாகம், இறக்கம், பொறுமை, எளிமை, ஈகை போன்ற நெறிகளை தங்கள் வாழ்வில் மக்கள் பின்பற்ற வேண்டும். வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வந்தால் உலகமே அமைதி பூங்காவை போல் பூத்துக்குலுங்கும். கிறிஸ்தவ மக்களின் நல்வாழ்விற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அவற்றில், இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவ பெருமக்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் சிறப்பு திட்டம், தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த ஏழ்மை நிலையில் உள்ள, ஆதரவற்ற விதவைகள், வயதான பெண்கள் ஆகியோருக்கு கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் மூலமாக நிதியுதவி வழங்குதல் மற்றும் தையல், பூ வேலைபாடுகள், காலணிகள், கைவினை பொருட்கள் செய்வதற்கான பயிற்சி வகுப்புகள், கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக அரசின் மானிய உதவி வழங்கப்பட்டு வருகிறது.
இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில் உலகமெங்கும் அன்பும் ,அமைதியும் நிலவட்டும். நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தனது மனமார்ந்த கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்று வாழ்த்தியுள்ளார்.