சினிமா துறையில் 10 வருடம் கஷ்டப்பட்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றம் சுமத்தியுள்ளார்.
நடிகை தனுஸ்ரீதத்தா தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தியில் அதிக படங்களில் நடித்த இவர் பிரபல வில்லன் நடிகரான நானா படேகர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது இவர் தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில் ” பொய், வஞ்சம், பழிவாங்குவது, ஏமாற்றுவது, தீங்கு செய்தல் போன்றவை நிறைந்ததே சினிமா. எனது இந்தி பட உலகின் முதல் படத்தில் இருந்தே இதனை நான் எதிர்கொண்டேன். என்னை பிடிக்காதவர்கள் பழிவாங்கத் துடித்தனர்.
என்னைப் பற்றிய தவறான கிசுகிசுக்களை பரப்பினர். அவர்கள் மூத்தவர்கள் என்பதால் ரசிகர்களும் நம்பினார்கள். சினிமாவில் உள்ள இதுபோன்ற சிக்கல்களை புரிந்து கொள்ள பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. புதியதாக நடிக்க வருபவர்கள், சிலரின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்காமல் இருந்தால் அவரது செயல் சரியில்லை என்று முத்திரை குத்தி ஒதுக்கி விடுவார்கள். சினிமா வாரிசுகளுக்கு வழிகாட்டிகள் இருப்பதால் அவர்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை. ஆனால் வெளியில் இருந்து வருபவர்களுக்கு மோசமான அனுபவமே கிடைக்கும்.” என்று நடிகை தனுஸ்ரீதத்தா கூறியுள்ளார்.