குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு முதலமைச்சர் காட்டமான பதிலடி கொடுத்தார்.
சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதையடுத்து அதிமுக கழக உறுப்பினர்களுக்கும், தி.மு.க. உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது. அப்போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எழுந்து தி.மு.க. உறுப்பினர்களுக்கு காட்டமாக பதிலளித்தார்.
சட்டப்பேரவையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசினார். அப்போது குடியுரிமை திருத்த சட்ம் பற்றி அவர் குறிப்பிட்டு மாநிலங்களவையில் அண்ணா தி.மு.க. வாக்களித்ததால் தான் சட்டம் நிறைவேறியது. இதனால் போராட்டங்கள் நடக்கின்றன என்று கூறினார்.
உடனே வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எழுந்து பதிலளித்தார். தமிழகத்தில் எந்தவிதமான சட்டம், ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை. நடக்காத ஒன்றை பற்றி இங்கு பேச வேண்டாம் என்றார்.
ஸ்டாலின்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நீங்கள் வாக்களித்ததால் தான் இந்தியா முழுவதும் வன்முறைகள் நடைபெறுகின்றன.
ஆர்.பி.உதயகுமார்: நாங்கள் வாகளித்ததால் வன்முறைகள் நடைபெறவில்லை. வராத ஒன்று பேசி விஷம பிரச்சாரம் செய்கிறீர்கள். தமிழகத்தில் அதுபோன்று வன்முறைகள் நடந்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம். தமிழகம் சட்டம், ஒழுங்கில் முதலிடம் பெற்று திகழ்கிறது. அதற்கு களங்கம் கற்பிக்க பார்க்கிறீர்கள்.
அனைவரும் தமிழக அரசை சூப்பர் எஸ்டிமேட் செய்கிறீர்கள். நீங்கள் அண்டர் எஸ்டிமேட் செய்கிறீர்கள். நாங்கள் உங்கள் ஆட்சியில் நீதிபதியின் மண்டை உடைக்கப்பட்டதையோ, மதுரை சம்பவத்தை பற்றியோ குறிப்பிடவில்லை. இல்லாத ஒன்றை பற்றியும், வராத ஒன்றை பற்றியும் பேச வேண்டாம். அம்மாவின் ஆட்சியில் சிறுபான்மையினர் சிறப்பாக பாதுகாக்கப்படுகிறார்கள். நீங்கள் உண்மைக்கு மாறான பிரச்சாரம் செய்கிறீர்கள். இது சிறுபான்மையினரிடையே எடுபடாது.
துரைமுருகன்: எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது இப்படி குறுக்கிட்டு பேசக்கூடாது.
முதலமைச்சர்: துரைமுருகன் மூத்த உறுப்பினர். அவர் இப்படி பேசுவது வருத்தம் அளிக்கிறது. அமைச்சர்கள் இப்படித்தான் பேச வேண்டும் என்று உத்தரவிட முடியாது. அமைச்சர்கள் உரிய விளக்கங்களை அளிக்கிறார்கள். இவ்வாறு முதலமைச்சர் கூறியபோது தி.மு.க. உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கூச்சல் போட்டார்கள். அவையில் கடும் அமளி ஏற்பட்டது. அதற்கு கழக உறுப்பினர்களும் எழுந்து தி.மு.க. உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, நான் எழுந்து நிற்கிறேன். அனைவரும் உட்கார வேண்டும். அது தான் மரபு. நான்எழுந்த உடனேயே முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து விட்டார். அது அவரது உயரிய பண்பை காட்டுகிறது. தி.மு.க. உறுப்பினர்கள் இப்படி செய்வது முறையல்ல. எதிர்க்கட்சி துணைத்தலைவர் பேசியதற்கு பதிலளிக்க முதல்வருக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. முதல்வரை பேச விடாமல் தடுப்பது சரியல்ல என்று கூறினார்.
தொடர்ந்து முதலமைச்சர் பேசியதாவது:-
எதிர்க்கட்சி துணைத்தலைவர் மூத்த உறுப்பினர். உங்களது கருத்துகளை கேட்டு நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். நீங்கள் அவைக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இது முக்கிய பிரச்சினையாகும். இதுபற்றி அமைச்சருக்கு விளக்கம் அளிக்க உரிமை இருக்கிறது என்று குறிப்பிட்டபோது தி.மு.க. உறுப்பினர்கள் மீண்டும் கூச்சல் போட்டனர்.
உடனே முதலமைச்சர் மீண்டும் எழுந்து பேச ஆரம்பித்தார். அமைச்சர் தெளிவான விளக்கத்தை இங்கு அளித்தார். நடைபெறாத சம்பவத்தை பற்றி பேசியதால் தான் அமைச்சர் அதற்கு உரிய விளக்கம் அளித்து பேசியிருக்கிறார். தமிழகத்தில் எந்த வன்முறை சம்பவங்களும் நிகழவில்லை என்று தெரிவித்திருக்கிறார். நாங்கள் தமிழகத்தை பற்றி தான் பார்க்கிறோம். இந்தியாவை பார்க்கவில்லை.
தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிறோம். அதில் தான் அதிக கவனம் செலுத்துகிறோம். குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் மேலோட்டமாக பேச வேண்டும் என்று சபாநாயகர் வேண்டுகோள் விடுத்திருந்தார். நீதிமன்ற பொருள் பற்றி வேண்டாம் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவரே தெரிவித்திருக்கிறார். அவர் அனுபவம் வாய்ந்தவர். அவர் அவைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
முக்கியமான பிரச்சினையாக இருப்பதால் ஆழமாக விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. அதைத்தான் அமைச்சர் கடந்த இரண்டு நாட்களாக செய்து வருகிறார். உங்கள் கட்சித் தலைவர் பேசியதற்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார். இந்த விஷயம் குறித்து மேலோட்டமாக பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.