குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் வன்முறை வெடித்துள்ளது. இதுகுறித்து மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி, “நாடு முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், லக்னோவில் மூன்று இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
பொது சொத்தை சேதப்படுத்துபவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும். இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் அனைத்து மாநிலங்களும் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் முதலில் சட்டத் திருத்ததில் என்ன உள்ளது என்பதை படிக்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம் இந்தியருக்கு எதிராகவோ பிராந்தியத்திற்கு எதிராகவோ மதத்திற்கு எதிராகவோ கொண்டுவரப்படவில்லை.
டெல்லி காவல்துறையினர் யாரையும் தாக்கவில்லை. அவர்கள் சட்டம் ஒழுங்கையே காப்பாற்றுகின்றனர். அமைதி காக்க வேண்டும் என்பதே தற்போது நமக்குள்ள கடமையாகும். குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த தவறான தகவல்களை அம்பலப்படுத்த வேண்டும்” என்றார்.