Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம்: மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த ராகுல் காந்தி!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் கலந்துகொள்ள ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே, காங்கிரஸ் சார்பாக டெல்லியில் உள்ள ராஜ் காட்டில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால், போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த போராட்டம் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறவிருக்கும் இந்த போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இதுகுறித்து ராகுல் காந்தி, “அன்புக்குரிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, இந்தியனாக உணர்வது மட்டும் போதாது. இதுபோன்ற நெருக்கடியான சூழலில், வெறுப்புணர்வு இந்தியாவை அழிக்க நாம் விட்டுவிடக்கூடாது. இந்தியாவுக்கு எதிராக வெறுப்புணர்வையும் வன்முறையையும் தூண்டிவிடும் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் குடிமக்களுக்கு எதிராக காவல் துறையினரை சர்வாதிகார மத்திய, மாநில பாஜக அரசுகள் தூண்டிவிடுகிறது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இதேபோல், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதலமைச்சர்கள் தலைமையில் அமைதி வழி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |