இந்தியாவில் சட்டவிரோதமாக அகதிகளாக தங்கியிருக்கும் வெளிநாட்டு குடிமக்களுக்கு எதிராக குடியுரிமை மசோதா உருவாக்கப்பட்டது. இந்த மசோதா 2016ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. இந்த திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை அறிமுகப்படுத்துகிறார்.
இந்த மசோதாவுக்கு அசாமில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த மசோதாவுக்கு எதிராக அசாம் சூட்டியா மாணவர் சங்கம் (Assam Sutiya Student Union) தேமாஜி நகரில் இன்று (டிச.9) 12 மணி நேர பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்துக்கு மேலும் சில மாணவர் அமைப்புகளும் ஆதரவு கொடுத்துள்ளன. சிவ்சாஹர் நகரில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தியோகர், ஜோர்ஹட் உள்ளிட்ட பகுதிகளில் டயர்கள் உள்ளிட்டவற்றை கொளுத்தி சாலையில் வீசினர்.
இதனால் அப்பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. முன்னதாக நேற்று, முதலமைச்சர் சர்வானந்த சோனாவால் மற்றும் நிதியமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா ஆகியோர் காலியாப்பூர் நகரில் நடந்த விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர்களுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டப்பட்டது. இதேபோல் நடந்த மற்றொரு சம்பவத்தில் அசாம் அமைச்சர் ஒருவரின் வீட்டை ஆர்ப்பாட்டக்காரா்கள் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.