சென்னை: மத்திய அரசைக் கண்டித்து தேசிய அளவிலான தொழிற்சங்கங்கள் சார்பில் ஜனவரி எட்டாம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டால், அவர்களுடைய சம்பளம் பிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., போன்ற மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து அறிவித்துள்ள இந்தப் போராட்டத்தில், நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசுகளின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது என்றும் மீறி பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சண்முகம் எச்சரித்துள்ளார்.
மேலும், அரசு ஊழியர்கள் எட்டாம் தேதி மருத்துவ விடுப்பு மட்டுமே எடுக்க வேண்டும் எனவும் மற்ற எந்த விடுப்பும் எடுக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார். அதையும் மீறி எடுத்தால் அவர்களுடைய சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் எச்சரித்து அனைத்துத் துறை முதன்மைச் செயலர்களுக்கும் தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
எட்டாம் தேதி விடுப்பு எடுத்தால், அவர்கள் குறித்த முழு விவரங்களையும் அறிக்கையாக உடனடியாக அரசுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.