திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிய குடும்பத்தின் முன்பு பேண்ட் வாத்திய குழு உடன் இளம்பெண் குடும்பம் தர்ணா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்தியபிரதேச மாநிலம் கோரக்பூரில் சேர்ந்த சந்தீப் மவுரியா என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அத்தை மகள் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண்ணுடன், சந்திப் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. பின்னர் அவருக்கு ராணுவத்தில் வேலை கிடைத்ததால் சந்திப் வீட்டார் அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.
இதை அறிந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் பேண்ட் வாத்திய குழு உடன் அவரது வீட்டிற்கு முன்பு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஊர் மக்கள் முழுவதும் அங்கு திரண்டனர். சந்தீப் தன்னைத் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக அந்த இளம் பெண்ணும் மிரட்டியுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் பெண் குடும்பத்தினரிடம் பேசி சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவதாக கூறிய பின் அவர்கள் அங்கிருந்து சென்றனர். மேலும் சந்தீப் ராணுவத்தில் பணியாற்றுவதால், அவர் மீது ராணுவ நீதிமன்றத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.